அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதியவர்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஆப்செண்ட் போட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கி மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றது. தேர்வு எழுத காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மற்றும் இ-மெயில் வழியாக அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. மின் வெட்டு மற்றும் இணையதள வேகம் பிரச்சனைகள் உள்ளிட்ட காரணங்களால் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக ஒன்றரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்படி வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசத்திலும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாமல் பிற்பகல் இரண்டு மணிக்கு பிறகு அலட்சியமாக பதிவேற்றம் செய்தவர்களின் விடைத்தாள்களை திருத்த வேண்டாம் எனவும், அந்த தேர்வர்களுக்கு ஆப்செண்டை குறிக்கும் வகையில் மதிபெண் சான்றிதழில் ஏ என குறிப்பிட உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வழங்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டி கால தாமதமாக பதிவேற்றம் செய்தவர்கள் சுமார் 10 ஆயிரம் இருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.