பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பக்வந்த் மன் இலக்கு வைத்து உள்ளதாகவும், அதனை நிறைவேற்றாவிட்டால், அவர்களை பதவியில் இருந்து விலக மக்கள் வலியுறுத்தலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி அக்கட்சி புதிய சாதனை படைத்துள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளது. இதை அடுத்து கடந்த 16 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த
பகவந்த் மன்
பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவி ஏற்றது. இந்நிலையில் இன்று, பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும், முதலமைச்சர் பக்வந்த் மன் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். அதனை அவர்கள் நிறைவேற்றாத பட்சத்தில், பதவியில் இருந்து விலகும்படி மக்கள் வலியுறுத்தலாம். கடந்த 3 நாட்களில் ஏராளமான விஷயங்கள் குறித்து பக்வந்த் மன் ஆய்வு செய்துள்ளார்.
பழைய அமைச்சர்களுக்கான பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதுடன், அது பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக புகார் எண் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு வந்துள்ளது. எம்எல்ஏக்கள் அனைவரும் சண்டிகரில் மட்டும் அமர்ந்திருக்கக்கூடாது.
அப்படியிருந்தால், குதிரைபேரத்தில் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. கிராமங்களுக்கு சென்று மக்களுடன் உலா வருவதே கட்சியின் தாரக மந்திரம். பஞ்சாப் மக்கள் வைரங்களை தேர்வு செய்துள்ளனர். 92 பேரும், பக்வந்த் மன் தலைமையில் ஒரே அணியாக செயல்பட வேண்டும். நான் அவரின் மூத்த சகோதரர்.
இவ்வாறு அவர் பேசினார்.