கோவை: அரசுப் பள்ளியின் வளர்ச்சியில் உள்ளூர் மக்கள் அக்கறை செலுத்தும்போது அந்த பள்ளிகளை மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் இன்று (மார்ச் 20) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்துகொண்டு அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி மோலாண்மை குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும். அந்த பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் என 20 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இக்குழுவில் 50 சதவீத பெண்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்குழு பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் இதர பள்ளித் தேவைகள் குறித்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கலாம். இக்குழுவில் உள்ள அனைவரும் படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளை நடத்துவதில் அரசுக்கு முக்கிய பங்கு இருந்தாலும்கூட, உள்ளூர் மக்கள் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும்போது பள்ளியை மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தலைமை ஆசிரியர் பி.சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.