அவருக்கு வயிற்றெரிச்சல், அதனால்தான் அப்படி பேசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை:
தமிழக அரசு தாக்கல்  செய்துள்ள வேளாண் பட்ஜெட்டை கண்துடைப்பாகவே பார்க்க முடிகிறது என்றும், அது விளம்பர பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். வேளாண்மை மானிய கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பைத்தான் அமைச்சர் படித்துள்ளார், வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், இது விவசாயிகளை ஏமாற்றுகிற நாடகம் என்றும் தெரிவித்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி – ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்ய வேண்டாம்.
“நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், உழவர் பெருமக்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.
அதனால்தானோ என்னவோ “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக – பேட்டியாக நேற்றைய நாள் கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார். கேட்பதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணையிடுகிறார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே தூர் வாரி– காவிரி நீர் கடைமடைக்கும் செல்வதை உறுதி செய்கிறார்.
இலவச மின்சாரத்திற்கு இடையூறு செய்ய வரும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புகிறார். காவிரி டெல்டாவைப் பாதிக்கும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்து- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதம் நடத்துவதற்கே வாய்ப்பு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து- கர்நாடக அரசைப் பின்வாங்க வைக்கிறார். முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் – தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான நதிநீர் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முனைப்புடன் செயல்பட்டு உழவர் நலனை – தமிழக உரிமையை நிலைநாட்டி வருகிறார் முதலமைச்சர்.
முதல்வர் ஸ்டாலின்
நியூட்ரினோ திட்டத்தை ஏற்க மறுக்கிறார். ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கையெழுத்துப் போட முடியாது என்று துணிச்சலுடன் கூறுகிறார். சென்ற நிதிநிலை அறிக்கையிலும்- இந்த நிதிநிலை அறிக்கையிலும்- இதுவரை வெளியிடப்பட்டுள்ள உழவர்களுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகளிலும்- வேளாண் துறைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து- வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை- இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு. நிறைவேற்றியவர் எங்கள் கழகத் தலைவரும் – தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி அவர்கள்தான்.
எங்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை-உழவர்களின் எதிர்காலம்! வேளாண் தொழிலின் பொற்காலம்! அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆகவேதான், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் – உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனைப் பேர் நம் பதவிக்குக் குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்றும் “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது!
உழவர்கள் தற்கொலை,உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு,உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கியது- உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது- மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்-இப்படி உழவர்களின் நாடி நரம்புகளில் சம்மட்டி எடுத்து அடிக்கும் வகையில் ஒரு அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை வேளாண் பெருங்குடி மக்களின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை!
ஆகவே அனைவரும் பாராட்டும் தமிழ்நாடு அரசின்- முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கலாம்; ஆனால் இன்று திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்துள்ள- உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதி நிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி- ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் தளபதியின் அரசு – 7000 கோடி விவசாயக் கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்த- இந்தியாவிற்கே முன்னோடியாக முதன்முதலில் இலவச மின்சாரம் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அரசின் வழி வந்துள்ள அரசு. இது உழவர்களின் அரசு-ஆகவே பழனிசாமி அவர்கள் இதுபோன்ற பகல் வேடங்கள் போட்டு அரசியலில் மேலும் “காற்று போன பலூன்” ஆகி விட வேண்டாம் என்ற அறிவுறுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.