நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. ஒரே நாடு ஒரே ரேஷன் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பதிலளித்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழிக்கு, மொழியாக்க வசதி உள்ளதால் தாங்கள் அதில் கேட்டுக்கொள்ளலாம் என்று பியூஷ் கோயல் பதிலளித்தார்.
இந்த பதிலுக்கு அதிருப்தி அடைந்த கனிமொழி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பது எனக்கு நன்றாக தெரியும், எனது கேள்வி ஆங்கிலத்தில் இருந்ததால் அதற்கான உங்கள் பதிலையும் ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்று தெறிக்க விட்டார்.
இதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல் தனது விளக்கத்தை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
இந்தி எதிர்ப்பை பாராளுமன்றத்தில் பதிவிட்ட கனிமொழி எம்.பி. யின் இந்த நடவடிக்கை தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றிலும் வரவேற்பை பெற்றுள்ளதோடு அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.