இந்தியாவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து கடந்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கொரோனா கண்காணிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அண்மையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், வரும் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தற்போது கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கு
மத்திய அரசு
சார்பில் அறிவுறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.