புக்கெட் : ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா 2 தங்கம் உட்பட 8 பதக்கம் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை தொடர் நடந்தது.
இந்தியா சார்பில் 16 பேர் கொண்ட இளம் அணி பங்கேற்றது. தென் கொரியா, சீனா, ஜப்பான் என வலிமையான அணிகள் இல்லாத நிலையில் 10 பிரிவுகளில் 7ல் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.
பெண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், சாக் ஷி மோதினர். இருவரும் 140 புள்ளி பெற, ‘ஷூட் ஆப்’ முறைக்கு போட்டி சென்றது. இதிலும் இவரும் 10 புள்ளி பெற்றனர்.
இருப்பினும் மையப்புள்ளிக்கு அருகில் வில் எய்த, சாக் ஷி தங்கம் வெல்ல, பர்னீத் கவுருக்கு வெள்ளி கிடைத்தது.
‘ரிகர்வ்’ ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் பார்த், ராகுல், திராஜ் அடங்கிய அணி, 6-2 என கஜகஸ்தானை வென்று தங்கம் கைப்பற்றியது.மற்ற 5 பைனலில் இந்தியா தோல்வியடைந்து அதிர்ச்சி தந்தது.
‘ரிகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவு பைனலில் இந்தியாவின் திஷா, ரிதி, தனிஷா அடங்கிய அணி, வங்கதேசத்திடம் 4-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.’ரிகர்வ்’ கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரிதி, சுஷாந்த் ஜோடி, பைனலில் 3-5 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் வீழ்ந்து, வெள்ளி கைப்பற்றியது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி மட்டும் வென்று 8 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது. 3 தங்கம், 1 வெள்ளியுடன் வங்கதேச அணி முதலிடம் பெற்றது.