சேதி சொல்லும் சிட்டுக்குருவியை கொண்டாடும் தேதி இன்று!
ஆம். மார்ச் 20-ந்தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம். இயற்கை ஆர்வலர்களின் இதயம் கவர்ந்த இந்த சின்னஞ்சிறு பறவை இனம் எங்கு எந்த பக்கம் திரும்பினாலும் காண கிடைக்கும் பறவையாகத்தான் நம் கண்முன்னால் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.
ஆனால் 1990 களிலேயே சிட்டுக்குருவிகள் நம்மை விட்டுபோய்விடும் வகையில் அழிவு பாதையில் அவைகளை பயணிக்க வைத்துள்ளோம் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை மணியை ஒலித்தனர்.
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள் நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற சில காரணங்கள் தான் சிட்டுக் குருவி என்ற இந்த சிற்றினத்தை அழிவுப் பாதையில் தள்ளி இருக்கின்றன.
காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. இந்த சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 13 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளை பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது.
சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி வீடு முழுவதும் குளீருட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப்புகையால் காற்று மாசடைந்து குருவிகளை வாழவைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏர்படும் உணவுப் பற்றாக்குறையால் நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினியால் அழிந்து வருகிறது.
கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் உணவு தானியங்கள் கோணிப்பைகளில் இருந்து வீதிகளில் சிறிதளவாவது சிதறும். அவை சிட்டுக்குருவிகளுக்கு உணவாக மாறும்.
ஆனால் இப்போது பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பதிலாக பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப்பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால் வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லாமல்போனது.
வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவும் உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன. அலைபேசிகளின் வருகைக்கு பின்னர் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது என்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் கணேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பை தொடங்கினார்.
திருவொற்றியூர் பகுதியில் 5 பள்ளிகளில் கூடுகட்டும் பயிற்சியை வழங்கி வருகிறார். நாளைக்குள் 300 கூடுகளை தயார் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் நமது பொறுப்பு.