ஜெருசலேம்:
இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியா வர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணைய வழி ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் அவரது இந்திய வருகை இருக்கும் என்று பென்னட்டின் வெளிநாட்டு பிரிவு ஊடக ஆலோசகர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இரு தலைவர்களும் முதன்முதலில் சந்தித்தபோது பிரதமர் பென்னட்டை இந்தியாவுக்கு வருமான பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
எனது நண்பரான பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு எனது முதல் அரசு முறை பயணத்தை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பென்னட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.