நியூயார்க்,
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது. இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது.
எனினும், தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன. எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து உள்ளது.
உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது. நேட்டோவில் உறுப்பினர் அல்லாத நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் களமிறங்கவில்லை.
உயிரியல் ஆயுதங்கள்
எனினும், இந்த போரில் உக்ரைன் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்ற சந்தேகம் ரஷியாவுக்கு எழுந்துள்ளது. இதற்கேற்ப, உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நேய்க்கிருமிகள் ஏதேனும் இருந்தால், அதனை உடனடியாக அழித்து விடுங்கள் என உக்ரைனிடம் உலக சுகாதார அமைப்பு கூறியது.
ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால், உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நோய்க்கிருமிகள் கசிய வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கிருமிகள் பொதுமக்களை தாக்கவும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நோய்க்கிருமிகளை தடுக்கும் விதமாக, ஆபத்தான நேய்க்கிருமிகளை உடனடியாக அழிக்கும்படி உக்ரைனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு அறிவுரை வழங்கியிருந்தது.
ராணுவ செயல்பாடுகள்
இதுபோன்ற விசயங்களை கவனத்தில் கொண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரஷிய தூதரகம் தனது டெலிகிராம் சேனல் வழியாக வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைன் நாட்டில் உள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ உயிரியல் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை உடனடியாக அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த செயல்களுக்கு பின்னால், பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) அமைப்பு இருக்கும்போது, எந்த வகையான அமைதியான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தது.
திடுக்கிடும் குற்றச்சாட்டு
இதற்கு அமெரிக்க தரப்பில் இருந்து உடனடி பதில் ஏதும் வெளிவரவில்லை. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து உள்ளது.
கடந்த வாரத்தில், உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பை அடையாளப்படுத்தும் வகையிலான புதிய விவரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என ஐ.நா.வுக்கான ரஷியாவின் நிரந்தர பிரதிநிதி வாசிலி நெபன்சியா கூறியுள்ளார்.
உலகம் முழுமைக்கும் அமெரிக்க நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள 360 ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வரும் சீனாவுக்கு நாங்கள் முழு அளவில் ஆதரவு தெரிவிக்கிறோம் என ஐ.நா. அமைப்பில் ரஷியா தெரிவித்து உள்ளது.
நிதி உதவி
இதுதவிர, உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், ஒடிசா, வீவ் ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதற்கான விவரங்களையும் வேசிலி வழங்கினார்.
உக்ரைன் நிலப்பகுதியில் ஆபத்து விளைவிக்க கூடிய உயிரியல் பரிசாதனைகளை நடத்துவதற்கு அமெரிக்கர்களுடன் இணைந்து உக்ரைனிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
கொரோனா பாதிப்பு சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டது என்ற ஊக தகவல் முன்பு வெளியானபோது, சீனா அதனை மறுத்தது. அமெரிக்காவின் நேரடியான குற்றச்சாட்டு வெளியானபோது, பதிலடியாக ஏன் அமெரிக்காவில் இருந்து கொரோனா பரவியிருக்க கூடாது? என்றும் சீனா கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையே கடும் போர் மூண்டுள்ள சூழலில் உயிரியல் ஆய்வக பரிசோதனை எந்தவித ஆபத்துகளை ஏற்படுத்த கூடும் என்ற அச்சமும் உலக மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.