ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமெரிக்கா வழங்க முன்வந்துள்ள ஜவேலின்(Javelin) மற்றும் ஸ்டிங்கர்(stinger) ஏவுகணைகள் உக்ரைனை விரைவில் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் சேருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுத்த போரானது நான்காவது வாரமாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ பலத்தில் ரஷ்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், உக்ரைனின் ராணுவ பலமானது மிகவும் குறைவானதாகவே கருதப்படுகிறது, எனவே உக்ரைன் ராணுவ பலம் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.
அந்த வகையில், ஜவேலின் மற்றும் ஸ்டிங்கர் போன்ற ஏவுகணைகளின் குறிப்பிட்ட தொகுப்பை ஏற்கனவே அனுப்பிவைத்து இருந்த நிலையில், ஜவேலின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகளின் அடுத்த தொகுப்பும் விரைவில் வந்தடையும் என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு ஒலெக்ஸி டானிலோவ் அளித்த பேட்டியில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா வழங்க இருக்கும் ஆயுதங்கள் ஒருசில நாட்களில் வந்தடையும் எனவும், அவை எதிர்காலத்தில் நமது நாட்டிற்குள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஏதும் ஆயுதங்களை வழங்க முன்வந்தால் தக்க பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.