உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் – 400 பேரின் கதி என்ன?

உக்ரைனில் மரியபோல் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. அசோவ் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. தற்போது நகரின் நான்கு பக்கங்களில் இருந்தும் தாக்குதல் தொடுத்தபடியே ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகின்றனர். மரியபோல் நகரில் ரஷ்ய ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாகவும், இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

மரியபோல் நகரில் ரஷ்ய ராணுவம் இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் பள்ளி ஒன்று இடிந்து நொறுங்கியது. போரினால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இடம் தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்துள்ளது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் தாக்குதல் நடைபெற்றது. 

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: அச்சத்தின் உச்சம் தொட வைக்கும் போர்க்கள புகைப்படங்கள்

உருக்குலைந்த பள்ளி கட்டடத்தின் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 130 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. காயங்களுடன் மீட்கப்பட்ட 130 பேரில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவர்களை தவிர்த்து மீதம் உள்ள 270 பேரை இடிபாடுகளுக்கு இடையே தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது. கின்சால் எனப்படும் இந்த ராட்சத ஏவுகணைகள் தான் தற்போது உக்ரைனில் கடும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைனை சுற்றி இருக்கும் கருங்கடல், அசோவ் கடல், காஸ்பியன் கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்க் கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணைகள் வீசப்படுகின்றன. 

Schhol

ரஷ்யா –  உக்ரைன் இடையிலான போர் காரணமாக இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை 1200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போர் முடிந்த பிறகே உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.