புதுடெல்லி:
உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து அதிகப்படியான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். போர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பாகவே வரலாறு காணாத விலைவாசி உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது. விலைவாசி உயர்வு என்பது அனைத்து இந்தியர்கள் மீதான வரியாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.