உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜ.க. 47 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. எனினும் காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார். இதனால் அந்த மாநில புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் டேராடூனில் உத்தரகாண்ட் பா.ஜ.க புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மேலிட பார்வையாளர்கள் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகியும் பங்கேற்று புதிய முதலமைச்சர் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின்னர் இந்த கூட்டத்தில் உத்தரகாண்ட் சட்டசபை பா.ஜ.க. தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனிடையே, உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் தேர்வு பட்டியலில் தோல்வியடைந்த புஷ்கர்சிங் தாமி பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்பால் மகாராஜ், தன் சிங் ராவத், அனில் பலூனி உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் புஷ்கர் சிங் தாமிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என மாநில பா.ஜ.க. தகவல்கள் தெரிவித்துள்ளது.
அவர் தேர்வு செய்யப்பட்டால், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில், தங்கள் தொகுதியை வழங்க, பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பி எல் சந்தோஷ் , சட்பால் மஹராஜ், புஷ்கர் சிங் தாமி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM