ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளது. இது ஒரு பகல் கனவு நிதி நிலை அறிக்கை. தமிழக அரசின் கடன் தொகை ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழக மக்கள் மீது கடுமையான கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையில் தொலைநோக்குப் பார்வை, தெளிவு, புரிதல் எதுவும் இல்லை.
தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 தருவதாக அறிவித்தனர். அதை திமுக நிறைவேற்றவில்லை. அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் அளிப்பதை வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் படிக்கும் 36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் கொடுக்க முடியுமா?. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை வேறு திட்டத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு வந்த தமிழக அரசு, நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு நிலுவை தொகையை வழங்கியதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர்சூட்டி புதிய திட்டம்போல் அறிவித்துள்ளனர். தமிழக ஆளுநரிடம் மார்ச் 21-ல் ஊழல் தொடர்பாகபுகார் அளிக்க உள்ளோம். சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்த வேண்டும். தொடர்புடைய ஊழல் அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவர்கள் சரவணன், மகா சுசீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டில் நடந்த கோயில் திருவிழாவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.