படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் இன்று கேரளா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.
கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. இன்று படோர்டாவில் நடக்கவுள்ள பைனலில் கேரளா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதனை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறை
லீக் சுற்றில் விளையாடிய 20 போட்டியில், 9 வெற்றி, 7 ‘டிரா’, 4 தோல்வி என, 34 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த கேரளா அணி, அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் அணியை தோற்கடித்து, மூன்றாவது முறையாக (2014, 2016, 2022) பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய இரண்டு பைனலிலும் கோல்கட்டா அணியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இம்முறை அசத்திய ஜார்ஜ் டியாஸ் (8 கோல்), ஆல்வரோ வாஸ்குவேஸ் (8), சஹால் சமத் (6), அட்ரியன் லுானா (6) உள்ளிட்டோர் மீண்டும் உதவினால் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.
முதல் பைனல்
லீக் சுற்றில் பங்கேற்ற 20 போட்டியில், 11 வெற்றி, 5 ‘டிரா’, 4 தோல்வி என, 38 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த ஐதராபாத் அணி, அரையிறுதியில் கோல்கட்டா மோகன் பகானை வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ள பார்தோலோமேவ் ஆக்பச்சே (18 கோல்) மீண்டும் கைகொடுக்கலாம். இவருக்கு, ஜாவியர் சிவேரியோ (7), ஜோவோ விக்டர் (5), ஜோயல் சியனேஸ் (4) ஒத்துழைப்பு தந்தால் முதன்முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.
ஆறு முறை
ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் கேரளா, ஐ தராபாத் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றன. தவிர, இம்முறை மோதிய 2 லீக் போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன.