கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் கோடை சீசன் ஏற்பாடு: உதகையில் 80 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு

நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மலர் அருவி, கற்களால் ஆன இருக்கைகள், அலங்காரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் இங்கு அமைந்துள்ள பசுமையான புல்வெளியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும், நர்சரியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கர்நாடகா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர்ச் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர் பாத்திகளில் இயற்கை உரமிட்டு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

சால்வியா, டேலியா, பிகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரேனியம், கேலண்டுலா உள்பட 20-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது களை எடுப்பது போன்ற பராமரிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சக்குலன்ட் என்று அழைக்கப்படும் அழகு தாவரச் செடிகளின் 20 ரகங்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அலங்காரச் செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

நர்சரியில் ஆர்க்கிட், பிகோனியா, சைக்ளோமன், ரெனன்குலஸ் உள்பட 50-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 20 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘கர்நாடகா  தோட்டக்கலை பூங்காவில் கோடை சீசனுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இசை நீரூற்று, தொங்கு பாலம் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.