மதுரை : ஹிஜாப் விவகாரத்தில் அரசு உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்த கர்நாடக மாநில தலைமை நீதிபதிக்கு, மதுரை ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது, ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கர்நாடகா மாநிலம், உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில் கடந்தாண்டு டிசம்பரில் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவியருக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஆடை விவகாரத்தில் கல்லுாரி நிர்வாகம் தலையிடுவதாக, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மாணவியர் மனு செய்தனர். தொடர்ந்து, கல்வி நிறுவனங்களுக்கு உரிய சீருடையில் மட்டுமே வர வேண்டும் என அரசு உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர் போராட்டங்கள் நடந்தன.இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி தலைமயிலான பெஞ்ச், ‘அரசு உத்தரவு செல்லும்’ என, தீர்ப்பளித்தது. இதை கண்டித்து மார்ச் 17ல், மதுரை கோரிப்பாளையத்தில், ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லா, நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அதற்கு உதாரணமாக பல்வேறு மாநிலங்களில் நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த சம்பவங்களையும், ஜார்க்கண்ட் கொலை சம்பவத்தையும் குறிப்பிட்டார்.உள்நோக்கத்துடன் பிற மதத்தினரின் அடையாளங்கள் குறித்தும் பேசினார். இதுதொடர்பாக, தல்லாகுளம் போலீசார் தாங்களாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மத, இன விரோத உணர்ச்சிகளை துாண்டிவிட முயற்சி செய்வது, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது, கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் ரஹ்மத்துல்லா, மதுரை துணைத்தலைவர் அசன் பாட்ஷா, மாவட்ட தலைவர் ஹபிபுல்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.ஹிந்து முன்னணி கண்டனம்!ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், ‘நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது கண்டனத்திற்குரியது. இதற்கு முஸ்லிம் சமூக பெரியவர்களும், இயக்கங்களும் கண்டனம் தெரிவிக்காதது, ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் கூட கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’ என, தெரிவித்துள்ளார். அதிராம்பட்டினத்தில் பேச்சாளர் கைது!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லையைச் சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி, 43, பேசினார்.
அவர், ஹிஜாப் குறித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை துாக்கிலிட வேண்டும் எனவும், மத கலவரத்தை துாண்டும் விதமாகவும் பேசினார்.இது தொடர்பாக, ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ., கவுரிசங்கர் அளித்த புகார்படி, அதிராம்பட்டினம் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்து, தஞ்சாவூர் நோக்கி வந்த ஜமால் முகமது உஸ்மானியை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர்.