பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளுக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து ‛ஓய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் பள்ளி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடையை அம்மாநில கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், உமாபதி என்ற வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்த வீடியோ ஒன்றில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனை, அவர் உயர்நீதிமன்ற பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில் உமாபதி கூறியுள்ளதாவது: எனக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்று வந்தது. அதில், தமிழில் பேசப்பட்டிருந்த அந்த வீடியோவில் ஹிஜாபுக்கு தடை விதித்த தலைமை நீதிபதி மற்றும் மற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில்( மதுரையாக இருக்கலாம்) நடந்த பொது கூட்டத்தில் பேசிய பேச்சாளர், ஜார்க்கண்டில் சாலையில் நடந்து சென்ற நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு அதேபோல், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் மிரட்டல் விடுத்ததுடன், அவர் செல்லும் இடம் அனைத்தும் தனக்கு தெரியும் என பேசியுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ‛ஓய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விதான் சவுதா போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்படி டிஜி மற்றும் ஐஜி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement