ஹரித்துவார்: ‘கல்வியை காவி மயமாக்குவதில் என்ன தவறு’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பைத் தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பேசியதாவது: நீண்ட கால காலனி ஆதிக்கத்தால், தாழ்வான மனநிலை நம்மிடம் உருவாயிற்று. அன்னிய ஆட்சி மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற பழமையான கல்வி முறை சிதைக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கான வேகத்தை குறைத்தது. கல்வியில் அன்னிய மொழி கட்டாயமாக புகுத்தப்பட்டதால் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே கல்விக்கான வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டது. காலனி ஆட்சி கால மனநிலையை கைவிட்டு இந்திய பாரம்பரியம் குறித்து நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து பல இந்திய மொழிகளை கற்க வேண்டும்.இளைஞர்கள் தங்களது தாய்மொழியை மேம்பாடு அடையச் செய்யவேண்டும். அரசு நிர்வாகம் மற்றும் அரசு ஆணைகளை தாய்மொழியிலேயே வெளியிடப்படுவதை பார்க்க விரும்புகிறேன். நீதிமன்ற நடவடிக்கைகளும் உள்ளூர் மொழியிலேயே இருக்க வேண்டும். பிரிட்டிஷ் காலத்து மெகாலே கல்வி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.கல்வி காவிமயமாக்கப்படுவதாக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள். கல்வி காவிமயமாக்குவதினால் என்ன தவறு இருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உலகமே ஒரு குடும்பம் என்று நமது இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துதான் அரசின் வெளிநாட்டு கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையினால் உலக நாடுகள் நம்மை மதிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.