சென்னையில் உள்ள தகனக் கூடங்களை விரைவில் திரவ பெட்ரோலிய வாயுவால் (எல்.பி.ஜி) இயங்கும் தகனக் கூடங்களாக மாற்றியமைக்கும் முனைப்பை மேற்கொள்ள உள்ளது மாநகராட்சி நிர்வாகம். முதற்கட்டமாக தி.நகரில் ஒரு எல்.பி.ஜி எரியும் தகன மேடை அமைக்கப்படவுள்ளது.
உடல் தகனம் செய்யும் பணியை விரைவு படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி முழுவதும் எல்.பி.ஜி எரிவாயு மூலம் இயங்கும் மயானங்களை அறிமுகப்படுத்தவுள்ளது சென்னை மாநகராட்சி. இம்முயற்சி பெருகிவரும் காற்றுமாசை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எல்.பி.ஜி தகனக் கூடங்களை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 8.35 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சி அமைக்கவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திடம் (TUFIDCO) சமர்ப்பிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பொதுவாக, பழைய வழக்கப்படி, விறகின் மூலம் எரிக்கப்படும் போது, முழுவதுமாக எரிய 12-16 மணிநேரம் ஆகும். இதுவே மின்சார தகன அறையில் இந்தக் காலநேரம் 4 மணிநேரமாகக் குறைகிறது என்கிறார்கள்.
“விறகுகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மின்சார தகனக் கூடங்களில், உலை சரியான நிலைக்கு வர நான்கு மணி நேரம் ஆகும். இதுவே எல்.பி.ஜி யில் அதற்கு முன்னரே உலையை நிலைப்படுத்தலாம். இம்முறையில் பொதுவாகத் தகனத்திற்குத் தேவைப்படும் 500 முதல் 1000 டிகிரி செல்சியஸ் வரையான சக்தியை உடனடியாக பெற முடியும். இந்தச் செயல்முறை சில மணி நேரத்தில் செய்யப்படுவதால் சாதாரணமாக நிகழும் காற்று மாசை விடக் குறைந்த அளவே காற்று மாசு ஏற்படும்” என மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சுடுகாட்டில் 100 கிலோ எடையுள்ள உடலை எரிக்க, குறைந்தது 19 கிலோ எடையுள்ள ஒரு முழு சிலிண்டர் பயன்படுத்தப்படும். இதைத் தேவைக்கேற்ப பொது நிறுவனங்கள் விநியோகிக்கும். மாநகராட்சியின் தோராயமான மதிப்பீட்டின்படி, ஒரு உடலை முழுவதுமாக எரிக்க சுமார் 500 கிலோ மரம் தேவைப்படும். இவ்வளவு செலவுகள் இன்றி சுலபமாக மேற்கொள்ளப்படும் ஒரு புதிய முயற்சியே இந்த எல்.பி.ஜி தகனமேடைகள்.
மேலும், ஐ.நா அறிக்கையின்படி, நாட்டில் விறகு தகனம் செய்வதன் மூலம் சுமார் 5 லட்சம் டன் சாம்பல் மற்றும் 8 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மையில், உமிழ்வு அளவைக் குறைக்க இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.