போபால்: காஷ்மீர் பைல்ஸ் எடுத்தவர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் படம் எடுக்க வேண்டும் என மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 11ஆம் தேதி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் சித்தரிக்கிறது. விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த, இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரதமர் பாராட்டியதோடு பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இப்படத்தை ஆதரித்து பிரதமர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ள இப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இப்படத்தை ஆதரித்தும் விமர்சித்தும் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து மத்திய பிரதேச மாநில உயரதிகாரி நியாஸ்கானும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ம.பி.பொதுப்பணியித்துறையின் துணைச்செயலாளர் நியாஸ்கான் ஐஏஎஸ் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் கூறுகையில், ”’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பிராமணர்களின் வலியைக் காட்டுகிறது. அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல பல மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் காட்ட தயாரிப்பாளர் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, மனிதர்கள். நாட்டின் குடிமக்கள் ஆவர்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் காட்ட ஒரு புத்தகம் எழுத நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப்போல சில தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வரலாம். அதன்மூலம் சிறுபான்மையினரின் வலி மற்றும் துன்பங்களை இந்தியர்கள் முன் கொண்டு வர முடியும்” என்று நியாஸ் கான் தெரிவித்துள்ளார்.