தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் முன்னிலையில், நேற்று காலை 10 மணியளவில் சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இவ்விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சு.திருநாவுக்கரசு, எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் ஏ. செல்லகுமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸின் ஊடக பிரிவு மாநில தலைவர் கோபண்ணா கூறியதாவது:
“தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிலேயே கடும் உழைப்பின் மூலமாக பல்வேறு பொறுப்புகளை பெற்றவர் குமரி அனந்தன். ஆரம்ப காலத்திலே தமிழ் பற்றாளராக இருந்தவர், பெருந்தலைவர் காமராஜர் தலைமையை ஏற்று காங்கிரஸுடன் இனைந்து கொண்டார். 1967 காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது துவண்டு கிடந்த காங்கிரஸ்ஸை தூக்கி நிறுத்துவதற்கு, 1968 அக்டோபர் இரண்டாம் நாள் குமரியிலே தொடங்கி, இளைஞர்களோடு சென்னையை நோக்கி பாதயாத்திரையை முதன் முறையாக மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சியில் எழுச்சி ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும். 17 முறை மக்கள் பிரச்சனைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டார்.”
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் கூறியதாவது:
“கங்கை இங்கு வர வேண்டும், குமரிக்கடலை தொடவேண்டும் என்று பல வருடங்களாக போராடிக்கொண்டு, எல்லா பிரதமர்களுக்கும் கடிதம் எழுதி, எப்படியாவது கொண்டுவரவேண்டும் என்ற ஒரு வைராக்கியதுடன் இருப்பவர்; அது ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இங்கு எல்லோருக்கும் உள்ளது. அதுமட்டுமல்ல, பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமை என்று பல பணிகள் செய்திருக்கிறார்.”
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:
“இலக்கிய செல்வர் அவர்கள் ஒரு வரலாற்று பெட்டகம். தமிழகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய பங்கு, காங்கிரஸ் கட்சிக்காக ஆற்றிய பங்கு, இந்த தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அவர் பரப்புரை செய்த விதம், பெருந்தலைவர் காமராஜருடைய புகழ் பாடிய அவருடைய குரல், இவைகளெல்லாம் யாராலும் மறக்கமுடியாத ஒன்று.
குமரி அனந்தன் அவர்களின் நடைப்பயணங்களின் ஒன்றில் சிதம்பரத்திலிருந்து கடலூர் வரை பங்கேற்றேன். எப்படி அவரால் இவ்வளவு ஆரோக்கியமாக நடக்க முடிகிறது என்ற வியப்பை அளித்தது. திராவிட இயக்கத்திற்கு ஒரு சவாலாக அந்த காலத்தில் இருந்தவர் இலக்கிய செல்வர் தான். அவர்கள் கூறும் வாக்குகளை விமர்சிப்பதும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுமாக செயல்பட்டார். தேசியமும் திராவிடமும் ஒரு பேசும் பொருளாக தமிழகத்தில் இருந்த காலகட்டம் அது.
ஒவ்வொரு முறை பரப்புரை ஆற்றும் பொழுதும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக வைப்பார். அவருடைய குரல் வசீகரமான குரல். ஒன்றை தெளிவுப்படுத்துகிற பொழுது எதிரில் அமர்ந்திருக்கிறவர் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு தெளிவுபடுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர். தேசிய மாணவர் இயக்கத்தை பெரும் முயற்சிகொண்டு வளர்த்தவர்களில் அவர் முதன்மையானவர். தலைவர் அவர்கள் நிதியமைச்சராக இருந்தபொழுது கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்பதும், மாணவர்களுக்கான கல்விக்கடன் என்பதும் சமூகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய புரட்சி மட்டும் அல்ல, ஏழ்மையை ஒழிப்பதற்கான அற்புதமான நடவடிக்கை அது.
காங்கிரஸ் கட்சி வரலாற்றில் கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. அது பல வெற்றிகளையும், பின்னடைவுகளை சந்தித்திருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் பின்னடைவை சந்திப்பது என்பது புதிதான ஒன்று என்றோ அல்லது வரலாற்றில் இல்லாத ஒன்று என்று நினைக்கக்கூடாது. இன்று, பாஜக காங்கிரெஸ்ஸை வெற்றிகொண்டதற்கான விமர்சனங்கள், எதிர் தரப்புகளில் நடப்பதைவிட நம்முடைய தரப்பில் அதிகமாக நடக்கிறது. அதை வரவேற்றாலும், விமர்சனத்தை தாழ்வு மனப்பான்மையுடன் கையாளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாம் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறோம், தற்போது 7 ஆண்டுகளாக தான் ஆட்சியில் இல்லை. வரலாற்றில் 7 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம் அல்ல. காங்கிரஸ் இந்த தேர்தலை ஒரு அனுபவமாக கொண்டு, இன்னும் வீறுகொண்டு எழவேண்டும். தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிபெறுவது தான் ஒரு அரசியல் இயக்கத்தினுடைய வரலாறாக இருக்க வேண்டுமே தவிர, தடைகளே இல்லாத பாதை ஒன்றில் தான் பயணப்படுவேன் என்று சொன்னால், அது இயற்க்கைக்கு புறம்பானது என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.”
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
“குமரி அனந்தன் பிறந்த ஆண்டான 1933இலிருந்து இன்று வரை பல வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கும், அவை நமக்கு மறைந்திருந்தாலும் வரலாற்று புத்தகங்களின் தெரிந்துகொள்ளலாம். ஆனால், அவையெல்லாம் பாடபுத்தகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. ஆக, இன்றைய தலைமுறை அந்த வரலாற்றை தெரிந்துகொள்வதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது. அந்த வரலாற்றை நாம் உண்மை மாறாமல் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கருதினால் அது குமரி அனந்தனிடம் இருந்து தெரிந்துகொள்வது மூலமாக தான்.
அரசியல் ஆளுமை கொண்டவர்களுக்கு இலக்கிய ஆளுமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் குமரி அனந்தனிடம் இரண்டும் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தமிழ் ஆளுமையை தன்னுடைய பேச்சுதிறமையால் நமக்கு உணர்த்தும் வல்லமை படைத்தவர். குமரி அனந்தன், தன் மேடைப்பேச்சில் “அன்பில் சிறந்த” என்று ஆரம்பிப்பதன் மூலமாகவே நமக்கு தெரிகிறது.
குமரி அனந்தன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். பலகோடி நூறாண்டு இல்லையென்றாலும் ஒரு நூற்றாண்டாண்டு ஆவது அவர் வாழவேண்டும். அந்த ஒரு நூற்றாண்டிற்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கின்றது. இந்த பத்தாண்டுகளில், முதல் ஓரிரு ஆண்டுகள் தன் வரலாற்றை (சுய சரிதை) அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தன் வரலாற்றை எழுதினால் அதில் தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வரலாறு, பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு, காங்கிரஸ் கட்சி சந்தித்த வெற்றி மற்றும் தோல்வி ஆகிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெறும்.”
மதுரையை சேர்ந்த காமராஜர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், முனைவர் குமரி அனந்தனுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me