திருவனந்தபுரம்:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக வலுவடையும் என்று தெரிவித்தது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அசானி புயல் காரணமாக அந்தமானில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதுபோல கேரளாவிலும் மாநிலத்தின் உட்புற பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
அந்தமானில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று இந்திய கடற்படை அறிவுறுத்தி உள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்து வருவதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கும்படியும் கூறியுள்ளனர்.
இதுபோல நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு ஹெலிகாப்டரில் சென்றும் கடற்படையினர் எச்சரித்து வருகின்றனர்.
இதுபோல தமிழகத்தில் உள்ள மீனவர் அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கடலுக்கு சென்ற மீனவர்களை உடனே கரை திரும்ப அறிவுறுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதையும் படியுங்கள்… இலங்கையில் நிதி நெருக்கடி: காகிதம், மை தட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து