கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. கோடை வெப்பத்தை தவிர்த்து குளுமையை அனுபவிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புற்கள் காய்ந்து காட்டுத்தீ பற்றி எரிந்தது. கடும் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. வழக்கமாக கடந்த ஒரு மாதமாக மாலை வரை கொடைக்கானலில் வெயில் காணப்படுகிறது. மாலையில் வெப்பம் குறந்து குளிர்ந்த வானிலை காணப்பட்டது தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால் காட்டுத்தீ பரவுவது தற்காலிகமாக குறையும் நிலை உள்ளது. வெயிலின் தாக்கத்தை தவிர்க்க நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் அதிகம் வந்ததால் அப்சர்வேட்டரி, ரோஸ்கார்டன் பகுதிகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஊர்ந்து சென்றன. சுற்றுலாத் தலங்களான மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், தூண்பாறை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.
சாரல் மழையில் நனைந்தபடி ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நேற்று பகலில் 20 டிகிரி செல்சியமாக இருந்த வெப்பநிலை, மாலையில் சாரல் மழை காரணமாக வெகுவாக குறைந்து இரவில் 14 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த வானிலையாக உணரப்பட்டது.
கோடை காலம் துவங்கிய நிலையில் வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும்நிலை உள்ளது.