புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பு 2075 ஆக பதிவாகி உள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்பானது 2075ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோர்களில் கேரளாவில் 59 பேர் உட்பட மொத்தம் 71 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா இறப்புக்கள் எண்ணிக்கையானது 5 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் 98.73 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 0.56 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 0.41 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் 27,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 181.04 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.