கொரோனா 4-ம் அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்: அமைச்சர் பேட்டி

தூத்துக்குடி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100-க்கும் குறைவாக உள்ளது. இறப்பு பூஜ்யம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா 4-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது. எனவே எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்படும் என கான்பூர் ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.

தமிழ் வழிக்கல்விக்கு தி.மு.க. அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக மத்திய அரசு மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலந்து போன்ற நாடுகளில் உக்ரைன் நாட்டிலுள்ள பாடத்திட்டமே மருத்துவப் படிப்பில் நடைபெறுவதால் சில மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் கல்வி கற்கவும் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக மத்திய அரசு மூலமாக நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடனிருந்தார்.

இதையும் படியுங்கள்… மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்வதை பெருமையாக மாற்ற வேண்டும்- அமைச்சர் அறிவுரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.