கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் தற்போது சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்.23 அன்று உள்ளே நுழைந்த கும்பல் காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்து, பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக கேரளாவைச் சேர்ந்த சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். சயான் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் பலியாகினர். சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும், பல சாட்சிகள் விடுபட்டுள்ளனர் என்றும், எனவே இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சயான் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதையேற்ற ஊட்டி நீதிமன்றம் கூடுதல் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதியளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீபு, ஊட்டி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் ஆஜராகி, இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களும், ஆவணங்களும் திரட்டப்பட்டு வருகிறது. முக்கியமான வழக்கு என்பதால் மேல் விசாரணைக்கு பிறகே சாட்சி விசாரணையை தொடங்க முடியும். எனவே, சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்க கூடாது, என்றார்.
அப்போது, வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோரை சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைசட்டத்தின் பிரகாரம் முன்மொழியப்பட்ட சாட்சிகளுக்கும் உரிய வாய்ப்பு தரவேண்டும் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘தற்போது இந்த வழக்கில் மேல் விசாரணை நடைபெற்று வருவதால், தற்போதைய சூழலில் சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது, எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.