புதுடில்லி-கொரோனாவுக்கான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் இரு ‘டோஸ்’ இடைவெளி, 8 முதல் 16 வாரங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவில் தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு என முடிவானது. இதையடுத்து, நாட்டில் முதற்கட்டமாக ‘கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கியது. கோவாக்சின் முதல் டோஸ் செலுத்திய 28 நாட்களில், இரண்டாம் டோஸ் மற்றும் கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திய 6 – 8 வார இடைவெளியில் அடுத்த டோஸ் என அறிவிக்கப்பட்டது.
பின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி, 12 – 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவிஷீல்டு இரு டோஸ் இடைவெளியை 8 – 16 வாரங்களாக மாற்றலாம் என பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்படுவதுடன், புதிய கால அளவு மாற்றத்திலும், முந்தைய இடைவெளியில் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி பலன் சமமாக இருக்கும் என அதிகாரிகள் நேற்று கூறினர்.கோவாக்சின் தடுப்பூசியின் இரு டோஸ் இடைவெளி, 28 நாட்கள் என்பதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Advertisement