புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் அடிப்படையில், 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி 8 முதல் 12 வாரங்களாக குறைக்கப்படுவதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தும் கால இடைவெளி மாற்றம் செய்யப்படவில்லை. சமீபத்திய உலகளாவிய அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.