ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைக்குரிய இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸைப் பயன்படுத்தியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆந்திர பிரதேசத்தின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குடிவாடா அமர்நாத், “முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதவிக் காலத்தில் (2014-19) பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தினார். இதனை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்; அவர் தனது பதவிக்காலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பல அழைப்புகள் மற்றும் தரவுகளில் குறுக்கீடு செய்தார். சந்திரபாபு நாயுடு பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கினார் என்றால், அந்த மென்பொருள் அரசியல்வாதிகளுக்காகவா அல்லது தொழிலதிபர்களுக்காக வாங்கப்பட்டதா என்பதை மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும்… இது சாதாரணமான விஷயம் அல்ல, இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த தெலுங்குதேசம் கட்சியின் பொதுச்செயலாளரரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமாகிய நாரா லோகேஷ், “மம்தா உண்மையில் இதைச் சொன்னாரா, எங்கு எந்தச் சூழலில் சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இது நிச்சயமாக தவறான தகவல்தான்” என்றார்.
தெலுங்கு தேசம் கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது,”நாங்கள் எந்த ஸ்பைவேரையும் வாங்கவில்லை. சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நாங்கள் ஈடுபடவில்லை” என்று அக்கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM