புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் ஐகான் விருதை மாலத்தீவு அரசு வழங்கியுள்ளது .2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மேலும் 4 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணியிலும் இடம் பெற்றிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரெய்னா, ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.