சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு ஈ.சி.ஆர்-ல் உள்ள சொகுசு விடுதியில், ஹோலி பண்டியையொட்டி நடந்த பார்ட்டியில், அனுமதியில்லாமல் மது விருந்து நடப்பதாகப் வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். போலீசார் சோதனை செய்வதை அறிந்த எம்.எல்.ஏ விரைந்து வந்து பேசியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு சென்னை ஈ.சி.ஆர் பனையூரில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த சொகுசு விடுதியில் ஹோலிப் பண்டிகையையொட்டி, இரவு நேரத்தில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈ.சி.ஆர்.-ல் எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமாக உள்ள சொகுசு விடுதிக்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். அங்கே போதைப் பொருள் ஏதாவது பயன்படுத்தப்பட்டதா என்று சோதனை நடத்திய போலீசார், ரிசார்ட்டில் பார்ட்டியில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஹோலி பண்டிகையையொட்டி மது விருந்து நடைபெற்றதாக கூறியுள்ளனர். போதைப் பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், விருந்தில் பங்கேற்ற இளைஞர்களை, போலீசார் எச்சரித்து வெளியே அனுப்பினர்.
ரிசார்ட்டில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மது விருந்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் என அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர்.
இதனிடையே, தனது ரிசார்ட்டில் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த எம்.எல்.ஏ ரிசார்ட்டுக்கு விரைந்து வந்து போலீசாரிடம் பேசினார். பின்னர், அனைவரும் அனுப்பப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி, ரிசார்ட்டில் போதைப் பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, மது விருந்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது, விதி மீறல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”