அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் வழியாக நடத்திய செமஸ்டர் தேர்வில், குறித்த நேரத்திற்குள் விடைத்தாள்களை சமர்ப்பிக்காத 10,000 மாணவர்களுக்கு ஆப்சண்ட் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் 2021-ம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. முன்னதாக, மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் அளிக்கப்படாததால், ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓபன் புக் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வில், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தேர்வுகள் கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடை தாள்களை சமர்பிக்காத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் 10,000 மாணவர்கள் ஆப்சண்ட் போடப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு குறித்து இன்று ஒரு செய்தி தவறுதலாக வெளியிடப்படுகின்றது. குறிப்பாக, நான் இந்த அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய தேர்வுகளை ஆன்லைனில் அறிவிக்கிறபோதே, இரண்டு மாதத்திற்கு முன்பே நானே கூறினேன். ஆன்லைனில் தேர்வு எழுதியவர்கள் ஒருநாள், இரண்டு நாள் தாமதமாக அனுப்பினாலும் அந்த விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், தாமதமாக வந்த விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவையும் உடனடியாக திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எந்த மாணவருடைய ஒருநாள், அரைநாள் தாமதமாக வந்த மாணவர்களுடைய விடைத்தாள்கள்கூட நிறுத்தி வைக்கப்படாது. கண்டிப்பாக எல்லா மாணவர்களுடைய விடைத்தாள்களும் திருத்தப்படும். 10,000 மாணவர்கள் என்று கூறப்படுவது போல எல்லாம் இல்லை. எத்தனை பேர் தாமதமாக அனுப்பி இருந்தாலும் விடைத்தாள்கள் திருத்தப்படும். ஏனென்றால், அப்போதே பேட்டி கொடுக்கும்போது கூறினேன். கிராமப்புறங்களில் வெளிப்புறங்களில் இருந்து வருகிற மாணவர்கள், கொஞ்சம் தாமதமாக அனுப்பியிருந்தாலும் அதையும் திருத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். அதற்கு ஏற்ப, அந்த விடைத்தாள்கள் எல்லாம் திருத்தப்படும். கண்டிப்பாக, அவர்களுக்கு முடிவுகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் திருத்த சென்ற பணியாளர்கள், குறைவான விடைத்தாள்களைத் திருத்தியதாகவும் அவர்களுக்கு அதற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. நிறைய மாணவர்களுக்கு ஆப்சன்ட் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பதைக் கூறி செய்தியாளர்கள் அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்களுக்கு கலெக்ஷன் வராததால் இப்படி கிளப்பிவிட்டுவிட்டார்கள் என்று நகைச்சுவையாகக் கூறி சிரித்தார். பின்னர், தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “ஆப்சண்ட் போட்டிருந்தால் தவறு, ஆப்சன் போட்டிருந்தால் கண்டிப்பாக அதெல்லாம் நடைமுறையில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்த விடைத்தாள்கள் எல்லாம் திருத்தப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும். பணியாளர்கள் சொல்லி இருந்தாலும் தவறு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் உடனடியாக வழங்க முறையாக செயல்படுத்தப்படும். துணை வேந்தரும் அதற்காகத்தான் வந்திருக்கிறார். அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆகவே மாணவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அனுப்பிய தேர்வுத் தாள்கள் எல்லாம் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“