பெங்களூரு, : ராம்மூர்த்தி நகர் போலீசார், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகளை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்தும்படி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரின் ராமமூர்த்தி நகர் போலீஸ் குழுவினர், கடந்த ஆண்டு அக்டோபரில், குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மங்களூருக்கு காரில் சென்றனர்.
பெல்தங்கடியின், வேனுார் வனப்பகுதி அருகில், மர்மநபர்கள் செம்மர கட்டைகளை வாகனத்தில் ஏற்றுவதை, மப்தியில் இருந்த போலீசார் கவனித்தனர்.அந்நபர்களை பிடிக்க முற்பட்ட போது, இவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் நடந்தது. இருவரை போலீசார் பிடித்து, கை விலங்கு பூட்டினர். ஆனால் மற்றொரு நபர், போலீசார் மீது துப்பாக்கி நடத்தினார். இதனால் போலீசார், காரின் பின் பகுதியில் பதுங்கினர்.இதை பயன்படுத்தி, செம்மர கட்டைகளை அங்கேயே விட்டு விட்டு, அந்நபர்கள் கை விலங்குடன் தப்பிவிட்டனர். அதன்பின் 350 கிலோ செம்மர கட்டைகளை, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.செம்மர கட்டைகளை கைப்பற்றிய போலீசார், சட்டப்படி வழக்கு பதிவு செய்து, மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ராம மூர்த்தி நகர போலீசார், நீதிமன்றத்திடமும் தெரிவிக்கவில்லை; வழக்கும் பதிவு செய்யவில்லை.ஆறு மாதங்கள் கடந்தும், மவுனமாக இருந்தனர். செம்மர கட்டைகளை, போலீசாரே விற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஜெகன்குமார் என்பவர், நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம், புகார் செய்தார். கமிஷனரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement