கலபுர்கி: ‘தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தியின் குடும்பம் மட்டுமே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கிடையே அதிருப்தி தலைவர்கள் கொண்ட கட்சியின் ஜி-23 குழுவில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர்,‘‘ சோனியா காந்தியை பதவி விலக கோரவில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்கான எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம்’’ என்றார். சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியது குறித்து, காங்கிரசின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘‘குலாம் நபி பல ஆண்டுகளாக கட்சியில் உள்ளார். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் ஜி-23 குழுவில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டுதான் சோனியாகாந்தியை சந்தித்தார். கட்சியை ஒற்றுமையாக வழிநடத்தி செல்வது பற்றி அவர் பேசியுள்ளார். இது ஒரு நல்ல அறிகுறி ஆகும். கட்சியை பலப்படுத்துவது குறித்து அவர் பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு வரவேற்கத்தக்கது. காங். செயற்குழுவில் பேசிய பெரும்பாலான தலைவர்கள் 5 மாநில தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோரை மட்டுமே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். தோல்விக்கு கட்சியில் உள்ள அனைவருமே பொறுப்பு ஏற்க வேண்டும். சோனியா காந்தியின் குடும்பத்தினரை மட்டும் பொறுப்பு ஏற்க சொல்வது தவறு’’ என்றார்.