இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்தப் பயணத்தின்போது புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு வந்த ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடாவை, பிரதமர் மோடி வாசலில் சென்று வரவேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் கஷிடாவுக்கு ராஜஸ்தானில் தூய சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட ‘கிருஷ்ண பங்கி’ என்கிற கலைநய பொருளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்த கிருஷ்ண பங்கி பாரம்பரிய கருவிகளால் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் மயில் உருவமும், கிருஷ்ணரின் வெவ்வேறு தோற்றங்களும் கலைநயத்துடன் இடம்பெற்றுள்ளது.
பின்னர் இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இருநாட்டு பிரதமர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, தற்போதைய உலக அரசியல் நிலையை, ராணுவ பலத்தால் மாற்றியமைப்பதை ஏற்க முடியாது என்றும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அரசியலின் அடித்தளத்தை அசைத்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நேரடியாக குறிப்பிடாமல், தற்போதைய உலக நிகழ்வுகளால், புதிய சவால்கள் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு ஜப்பான் முதலீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?” – வெங்கய்ய நாயுடு கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM