ஐந்து மாநிலத் தேர்தல்:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட ஆகிய ஐந்து மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் 255 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாகப் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

உத்தரகாண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது பா.ஜ.க. அதேபோல, கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. கோவாவில் 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் பா.ஜ.க வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு புதிய வேளாண் திருத்தச் சட்ட மசோதா ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல, இந்த தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றிக்கு அந்த மாநிலங்களில் பா.ஜ.க கட்சியின் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் பா.ஜ.க ஐ.டி விங் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 12 தொகுதிகள் உட்பட மொத்தம் 160 தொகுதிகளின் வெற்றி தோல்விக்கு சமூக வலைதளங்களின் தாக்கம் முக்கிய காரணமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறியது. அந்த சமயத்தில் தேர்தல் குறித்தும், கட்சிகள் குறித்தும், பல்வேறு விவாதங்கள், விளம்பரங்கள் என்று சமூக வலைத்தளங்கள் ஒரு தனி தேர்தல் களமாக உருவெடுத்திருந்தன. உண்மையில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேர்தலில் சமூக வலைதளங்களின் பங்கு மிக முக்கியமாக மாறியது என்பதே மறுக்க முடியாத உண்மை.
தேர்தலில் சமூக வலைதளம்:
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய மொத்தமாகச் செலவு செய்த தொகை மட்டும் 42.3 கோடி ரூபாய். அதில் பா.ஜ.க மட்டும் செலவு செய்த தொகை ரூ.25 கோடி. இதில், கூகுள் விளம்பரத்துக்கு 11.6 கோடியும், ஃபேஸ்புக் விளம்பரத்துக்கு 13.43 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அதே நேரத்தில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் செலவு செய்தது ஃபேஸ்புக்குக்கு 74 லட்சம் ரூபாயும், கூகுளுக்கு 62 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1.42 கோடி ரூபாய் தான்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாதிரியான செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்தியது பா.ஜ.க. அரசியல் தலைவர்களின் நேரடி பிரசாரம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், இன்னொரு புறம் வாக்காளரின் செல்போன்களின் விளம்பரங்களின் மூலம் மறைமுக பிரசாரம் நடந்துகொண்டிருந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல, அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல விளம்பரங்கள் மூலமும், பிரபலமானவர்கள் மூலமும் டிஜிட்டல் பிரசாரத்தை நடத்தி முடித்திருந்தது. இதற்காகப் பல பிரபல நிறுவனங்களின் விளம்பர பிரிவு முதல் மக்கள் தொடர்பு அலுவலகம் வரை பலருடன் இணைந்து பணியாற்றியது பா.ஜ.க ஐ.டி விங். இந்த சமூக வலைதளங்களின் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பிரசாரம் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தற்போது நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் வரை பா.ஜ.க-வுக்கு பெரும் பலனைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.