ராமநாதபுரம்: தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ராமநாதபுரம் சரக அளவிலான காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திக்(ராமநாதபுரம்), செந்தில்குமார்(சிவகங்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட கொடுங்குற்ற வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், சமூக விரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்களை குறைப்பது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில், எந்தவித பாரபட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக, டிஜிபி ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மேலும் ஓராண்டு காலத்தில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையிலும், குத்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், கடல் அட்டை மற்றும் மஞ்சள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுப்பதிலும், ரவுடிகளின் மீது கடுமையான எடுப்பதிலும், சிறப்பான முறையில் பணிபுரிந்த அதிகாரிகள் பற்றும் காவல் துறையினர் 59 பேரை பாராட்டி, வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல் சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், வேலூர் சரகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ராமநாதபுரத்தில் நடத்தப்படுகிறது. ரவுடிகளை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆந்திராவிற்கே சென்று கஞ்சா கடத்தப்படும் இடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கஞ்சா, மஞ்சள் உள்ளிட்டவை கடத்தல் குறித்து பல்வேறு பிரிவு காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போக்ஸோ வழக்குகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பழைய புகார்களை கூட விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாட்டு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக வெளிநாட்டு குற்றவாளிகள் நடமாட்டம் இல்லை” எனக்கூறினார்.