தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (52). முன்னாள் பி.ஜே.பி பிரமுகரான இவர் மீது தஞ்சாவூரில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சூரக்கோட்டை ராஜாவை போலீஸார் தேடி வந்தனர்.
ஆனால் அவர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கான என ஒவ்வொரு மாநிலமாக மாறி மாறி இருந்து வந்தார். மேலும், தான் இருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு தலைமறவாக இருந்து வந்துள்ளார். அதனால், ராஜாவைக் கைது செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.ரவளிபிரியா தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து சூரக்கோட்டை ராஜாவை பிடிக்க தீவிரம்காட்டி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை டி.பி.சத்திரத்தில் நடைபெற்ற சேவல் சண்டையை சூரக்கோட்டை ராஜா பார்க்க வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீஸ் டீம் சேவல் சண்டை நடைபெறும் இடத்துக்கு சென்றனர்.
போலீஸார் எதிர்பார்த்தது போலவே சூரக்கோட்டை ராஜா சேவல் சண்டை போட்டியினை காண வந்திருந்தார். அப்போது தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து, தஞ்சாவூர் அழைத்து வந்ததுடன் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சூரக்கோட்டை ராஜாவை தஞ்சாவூர் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த பிரபல ரௌடியை கைது செய்த தனிப்படை போலீஸ் டீமை உயர் அதிகாரிகள் பாரட்டினர்.
இது குறித்து தனிப்படை போலீஸார் தரப்பில் பேசினோம், “பிரபல ரௌடியான சூரக்கோட்டை ராஜா மீது தஞ்சாவூர் தாலுகா, தெற்கு மற்றும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த ராஜாவை தேடி வந்தோம். ராஜா சேவல் சண்டை மீது ஆர்வம் கொண்டவன். எங்கு சேவல் சண்டை போட்டி நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வான். வெளிமாநிலங்களில் தலைமறைவாகயிருந்த ராஜா நிச்சயம் சென்னையில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியை காண வருவான் என கருதினோம். அதன்படி அங்கு வந்த அவனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.