சென்னை:
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் பற்றி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த உடன் நெல்லை கொள்முதல் செய்வதில்லை. திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பதால் மழையில் முளைத்து பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். அதே போல கொள்முதல் செய்த நெல்மணிகளை பாதுகாக்காமல் திறந்த வெளியில் வைத்திருப்பதால் அவையும் மழையில் நனைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மொத்தத்தில் சரியாக நிர்வாகத்திறமை இல்லாத அரசு என்பது இதன் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், போலி விவசாயி வேடத்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரிப்பீட் செய்ய வேண்டாம் என்றும், திமுக ஆட்சியில் விவசாயில் அலைகழிக்கப்பட்டதாக இபிஎஸ் கூறியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.