திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாகவும், தலை முடியை காணிக்கையாகவும் மற்றும் இதர நன்கொடைகளாகவும் வழங்குகின்றனர். அதன்படி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் 4 கோடி ரூபாய் வரை கிடைப்பது உண்டு. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று ஒரேநாளில் 80 ஆயிரத்து 429 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில் நேற்று ஒரே நாளில் ரூ.5.13 கோடி கிடைத்தது தெரியவந்தது. இதுதவிர நேற்று ஒரேநாளில் 38 ஆயிரத்து 182 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு 3 ஆண்டுகளுக்குப்பின் ஒரேநாளில் 5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.