சென்னை:
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் விரைவில் தீயணைப்பு வீராங்கனைகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் பிரஜ்கிஷோர் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
எங்களிடம் அதிகாரி பிரிவில் 22 பெண்கள் உள்ளனர். ஆனால் தீயணைப்பு பணியாளர்களுக்கான பெண்கள் எங்களிடம் இல்லை. தீயை அணைக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசின் தீவிர பரிசீலனையில் உள்ள இந்த முடிவு தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசு விரைவில் இது தொடர்பான முடிவை எடுக்கும்.
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தாம்பரம் அருகே புதிய அகாடமி அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.
மாநில பேரிடர் மீட்பு பணியில் நிரந்தர பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பயிற்சி பெறும் போலீசார் வேறு பணிகளுக்கு செல்வதால் அவர்களின் பயிற்சி வீணாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை: மருத்துவ நிபுணர் சொல்கிறார்