தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் மகள் அனு லத்திகா ஸ்ரீ (20). தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில், நேற்று காலை அதேப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றவர், மாலை வரை வீடு திரும்பவில்லை.
மாலையில் தோட்டத்திலிருந்து வந்த பவுன்ராஜின் தந்தை தன் பேத்தி எங்கே என கேட்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காலையில் தோட்டத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றதை கூறினர். அதையடுத்து தோட்டத்தில் உள்ள வீட்டில் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்புறம் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், உள்ளே பவுன்ராஜின் மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆண்டிபட்டி போலீஸார், தூக்கில் தொங்கியபடி இருந்த மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இறந்த மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி இன்று உறவினர்கள் மற்றும் டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி – மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . மாணவியின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்கும் வரையில் சடலத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் மறியலில் ஈடுபட்ட மக்களை போலீஸார் அப்புறபடுத்த முயன்றபோது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மாணவியின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். அதனால் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் ஆண்டிபட்டி – மதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவியின் உடல் இன்று மாலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் மருத்துமனையின் பிரதான நுழைவுவாயிலை அடைத்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு சிறிது நேரம் சிரமம் ஏற்பட்டது.