இந்த மாத இறுதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பி தரப்படும். போலி ஆவணம், போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை மாவட்ட மக்களுக்கு நகைக்கடன் வழங்கும் 16 கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையான பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு 13,595 பயனாளிகள் தகுதி பெற்றுள்ளனர். நகைகளுக்கு ஈடாக பெற்ற கடன் தொகை ரூ.66.75 கோடி (அசல் மற்றும் வட்டியுடன்) தள்ளுபடி செய்யப்பட்டு, தள்ளுபடி சான்றிதழும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைகளை திருப்பித் தரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் 165 பயனாளிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நகைகளை வழங்கினர். மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், சென்னை மண்டலகூடுதல் பதிவாளர் ந.மிருணாளினி, சைதாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கோ.மகாலிங்கம், சைதாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் என்.தீனதயாளன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:
மக்களின் குறைகளை அறிந்து உணர்ந்து அதை தீர்க்க திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொது நகைக்கடன் தள்ளுபடி இதுவரை வேறு எந்தஆட்சியாளர்களும் கொடுத்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அறிவித்த திட்டங்களின் பலனை அனைவருக்கும் முதல்வர் கொண்டு சேர்க்கிறார்.
வரும் 31-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள 14.40 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் கோடி பொது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.