வி.கே.சசிகலா இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் விவசாயம், எந்த வகையில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பது கேள்விக்குறியானது.
தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பயிர் விதைகளை தமிழக அரசே அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது, இடுபொருட்கள் மற்றும் உர விலைகளை குறைப்பது போன்ற எந்த அறிவிப்பும் இந்த தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது விவசாயிகளுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது உள்ள நிதி பற்றாக்குறையானது கொரோனா சார்ந்த காரணங்களாலும் மற்றும் பல்வேறு உலக நிகழ்வுகளாலும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்.
இருந்தபோதும், இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் ஒரு தாய் எவ்வாறு தனது வாயையும், வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளை காப்பாற்றுவாரோ. அது போன்று, ஒரு அரசு தன் சொந்த தேவைகளை குறைத்து கொண்டு மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் செயல்படவேண்டும்.
ஆனால் திமுக அரசிடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியாது. எனவே
“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்”
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று சசிகலா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.