புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது பரிவு காட்டும் பிரதமர் மோடியும், பாஜகவும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்ப இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின்போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அரயல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:
காஷ்மீர் போன்ற சென்சிடிவ் பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ வெறும் படம். வரும் தேர்தலில் இந்த படம் யாருக்கும் அரசியல் ஆதாயம் அளிக்காது என நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் படம் போய்விடும்.
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது பரிவு காட்டும் பிரதமர் மோடியும், பாஜகவும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்ப இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப முடியுமா என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வைத்து அரசியல் செய்வதற்கு பதில் அவர்களின் காயங்களுக்கு மருந்து தடவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.