திருப்போரூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நடனத்துடன் மதுவிருந்து நடப்பது அதிகரித்து உள்ளது.
போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி மது விருந்து நடத்தும் ஓட்டல்கள், வீடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பனையூர் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று இரவு மது விருந்தில் கலந்து கொண்ட 500 பேர் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் மது விருந்து நடப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் அந்த விடுதிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆவர்.
இரவு முதல் விடிய, விடிய பெண்கள் நடனத்துடன் மதுவிருந்து நடந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இந்த சோதனையில், மது விருந்தில் நடனமாடிய 50 பெண்களும் சிக்கி உள்ளனர். விடுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிகமானோர் மொத்தமாக கூடி மதுவிருந்து நடத்திய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மது விருந்தில் பங்கேற்று பிடிபட்ட அனைவருடைய தகவல்களையும் போலீசார் சேகரித்து பதிவு செய்தனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் தனியாக அமர்ந்து மது விருந்தில் பங்கேற்றவர்களிடம் விவரங்களை கேட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்டமாக காணப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். மதுவிருந்து நடத்திய விடுதி மேலாளர் சைமனை போலீசார் கைது செய்தனர். மேலும் சொகுசு விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.