பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதிலும் 276 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 1-12 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
புத்தகங்கள் விற்பனையை இதுவரை பாடநூல் கழகமே நேரடியாக செய்து வந்தது. இந்நிலையில், புதிய முயற்சியாக சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. விருப்பம் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விற்பனைக்கு அனுமதி கோரி 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகத்தில் 276 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விற்பனையாளர்களின் விவரங்கள், பாடப் புத்தகங்களின் விலைப் பட்டியல் www.textbookcorp.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாடநூல் விற்பனை செய்ய விரும்பும் சில்லறை விற்பனையாளர்களும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். கூடுதல்விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.