பஞ்சாப், உத்தரகாண்ட, உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியமைத்திருக்கிறது. மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் டெல்லியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலம் பேசினார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், உட்கட்சி பூசல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக பதவியேற்றனர். பஞ்சாப் அரசு நேரத்தை வீணடிக்காமல் ஆட்சி அமைத்து வேலை செய்யத் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் பகவந்த் மான், அவரது படைப்புகளைப் பற்றித்தான் பேசப்படுகிறது. பதவியேற்று மூன்றே நாள்களில் பகவந்த் மானின் பணி குறித்து நான் மிக பெருமைப்படுகிறேன்” என்றார்.